Sunday, May 28, 2006

அர்ச்சகர்கள் யார்?



துக்ளக் (31.5.2006) :

ஆகம விதிமுறை

“ .... அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பது ஆகம விதிகளுக்குப் புறம்பானது என்பது நிச்சயம். ஆகம விதிமுறைப்படி பிரதிஷ்டை நடந்து, அதன்படி வழிபாடுகளும், பூஜைகளும் நடக்கிற கோவில்களில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தீர்மானிக்கப்பட்டால் - அது ஆகம விரோதமே.

ஆனால், ஆகம விதிமுறைகளின்படி அல்லாமல், பிரதிஷ்டை நடந்து, பூஜைகளும் நடக்கிற கோவில்கள் பல உண்டு. அவற்றில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது ஆகம விரோதம் அல்ல.

'பிராம்மணர்கள்தான் அர்ச்சகர் ஆகலாம் என்பது இப்போதுள்ள நிலை' என்கிற எண்ணம் தவறானது. ஆகம விதிமுறைப்படியான கோவில்களில் அன்றும் சரி, இன்றும் சரி பிராம்மணர்கள், அர்ச்சகர்கள் ஆக முடியாது. சொல்லப் போனால், கர்ப்பகிரஹத்தினுள்ளேயே நுழைய முடியாது. விக்ரஹத்தை தீண்ட முடியாது. அப்படி நடந்தால் அது ஆகம விதிமுறை மீறல்.”


சிவாச்சார்யார்கள்

"சிவாச்சார்யார்கள் என்கிற பரம்பரையில் வந்தவர்கள்தான் அர்ச்சகர்கள் ஆக முடியும். இது ஆகம விதி. (இவர்களுக்கும், மற்ற பிராம்மணர்கள் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறவர்களுக்கும் இடையே திருமண சம்மந்தம் வைத்துக் கொள்ளப்படுவதில்லை. அந்த அளவிற்கு, இவர்கள் பொதுவான பிராம்மணர்களிலிருந்து, தனிப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.)"


வைணவக் கோவில்களில்

"வைஷ்ணவக் கோவில்களில், இரண்டு வகை உண்டு. ஒன்று - வைகானஸ முறையைப் பின்பற்றுகிற கோவில்கள்; மற்றொன்று - பாஞ்சராத்ர முறையைப் பின்பற்றுகிற கோவில்கள்; இதில் வைகானஸ முறை கோவில்களில் வைகானஸ பிரிவினர்தான் அர்ச்சகர்கள் (வைஷ்ணவ கோவில்களில், இவர்கள் பட்டாச்சாரியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்) ஆக முடியும். பாஞ்சராத்ர வழிமுறையில் அமைந்துள்ள கோவில்களில், அந்த ஆகமம் மூன்று நிலைகளைக் கூறுகிறது; இவற்றில் மூன்றாவது நிலையில் எந்தப் பிரிவினர் வேண்டுமானாலும் தகுதி பெற்று பூஜை செய்யலாம்; முதல் இரண்டு நிலைகளில் முடியாது….."


மற்ற கோவில்களில்

"... ஆங்காங்கே வேறு சில வழிமுறைகளைப் பின்பற்றுகிற கோவில்களும் பல உண்டு. சிதம்பரம் நடராஜர் கோவிலில் 'பதஞ்சலி பூஜாஸூத்ரம்' விதிக்கிற வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன; அங்கு தீட்சிதர்கள் தவிர வேறு யாரும் கர்ப்பக்கிரஹத்தினுள் போக முடியாது; மத குருமார்களாக இருந்தாலும் சரி, பெரிய ஆச்சார்யராக இருந்தாலும் சரி, அவர்களுக்கும் அனுமதி கிடையாது. மேல்மலையனூர் கோவிலில் பிராம்மணரல்லாத 'பர்வத ராஜ' குலத்தினர்தான் அர்ச்சகர்கள்; மற்றவர்களுக்கு உரிமை கிடையாது. கேரளத்தில், 'பரசுராம கல்பஸூத்ரம்' என்ற நூல் விதித்திருப்பவைதான் வழிமுறை...."


ஆகமமும் சிவாச்சாரியார்களும்

"..... ஆகம சாத்திரத்தின்படி பிரதிஷ்டை நடந்து, கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, ஆகம விதிமுறைகளின் படியே பூஜைகள் நடத்தப்படுகிற கோவில்களில், ஆகமத்தில் சொல்லியுள்ளபடி சிவாச்சார்யார்களே அர்ச்சகர்கள் ஆக முடியும்; மற்றவர்கள் யாராவது - பிராம்மணர்கள் உட்பட - கர்ப்பக்கிரஹத்தினுள் நுழைந்தாலும் சரி, விக்ரஹத்தைத் தீண்டினாலும் சரி, பூஜை நடத்தினாலும் சரி, புனிதம் கெடும்; பிராயச்சித்தங்கள் செய்ய வேண்டும்.....

அர்ச்சகர் பெற்றிருக்கிற உரிமை 'பரார்த்த பூஜை'; அதாவது மற்றவர்களுக்காக செய்கிற பூஜை. இதைச் செய்ய சிவாச்சார்யார்கள் தவிர, வேறு எவருக்கும் - அவர் எவ்வளவு உயர்ந்த கல்வி, வேத ஞானம், சாத்திர அறிவு, பக்தி எல்லாவற்றையும் பெற்றிருந்தாலும் சரி - உரிமை கிடையாது. இது ஆகம விதி. சிவாச்சார்யார் குலத்தில் பிறந்திருந்தால் மட்டும் போதாது; ஸ்ம்ஸ்க்ருத அறிவு; வேதங்களைப் பயின்றிருத்தல்; ஆகமங்களை முழுமையாக அறிந்திருத்தல்; தர்ம சாத்திரம், மற்றும் கிரியா சாத்திரம் ஆகியவற்றில் நிபுணத்துவம்; சைவ சித்தாந்த தத்துவ ஞானம்; ஆசாரங்களை கடைப்பிடித்தல்; தீட்சை பெற்றிருத்தல்; சைவ மந்திரம், முத்திரைகள், கிரியை முதலியன பற்றிய அறிவு; மீமாம்ஸை, வியாகரணம், தர்க்க சாத்திரம் ஆகியவை பற்றிய அறிவு.... என்று பல தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்; அப்படிப்பட்டவர்கள்தான் அர்ச்சகர் ஆக முடியும். இவை அனைத்தையும் பெற்றிருந்தாலும், சிவாச்சார்யார் தவிர வேறு யாரும் அர்ச்சகர் ஆக முடியாது....."



குமுதம் ரிப்போர்ட்டர் (28.5.2006):

தி.மு.க. அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவான 'எல்லா சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்கிற முடிவிற்கு தமிழ் நாடு அர்ச்சகர்கள் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. இதுபற்றி அர்ச்சகர்கள் சங்க மாநிலத் துணைச் செயலாளரும் சங்கரன் கோயிலைச் சேர்ந்தவருமான மணிபட்டர் கூறியதாவது:

"...."எல்லா சாதியினருக்கும் அர்ச்சகர் பதவி என்று சட்டம் கொண்டு வந்தால், அர்ச்சகர் பதவிக்குப் புதிதாய் ஆட்கள் சேர்க்கப்படுவார்கள். அப்படியென்றால் இதை நம்பியே பிழைப்பு நடத்தும் 1.80 லட்சம் பேரின் கதி என்ன? கோயில்களில் பூஜை நடத்துவது எங்களின் ஜீவாதார உரிமை. அந்தக் காலத்தில் அரசர்கள் எங்களை தமிழ்நாட்டுக்கு அழைச்சிக்கிட்டு வந்திருக்காங்க. முறைப்படி கோயில்களில் பூஜை செய்யணுங்குறதுக்காக, எங்களை நியமிச்சிருக்காங்க. எங்களுக்குச் சம்பளம் கிடையாது. அதுக்குப் பதிலா அரசர்களே விவசாய நிலம் தந்திருக்காங்க. இதற்கான செப்புப் பட்டயம் எங்ககிட்ட இருக்கு.

சாதாரணமா யாரும் எளிதில் அர்ச்சகர் ஆக முடியாது. எல்லாப் பிராமணனும் அர்ச்சகர் இல்லை. பிராமணன் வேறே, அர்ச்சகர் வேறே. அதை எல்லோரும் புரிஞ்சிக்கணும். ஒரு பிராமின் வங்கி, ஆபீசுகளில் வேலை பார்ப்பான். அர்ச்சகர் வேலை பார்ப்பதில்லை.

குடுமி, கடுக்கண் வைத்துக் கொண்டு எங்கே போய் வேலை பார்ப்பது? கோயிலில் பூஜை செய்வதைத் தவிர, அர்ச்சகருக்கு வேறு தொழில் தெரியாது. எட்டு வயதில் பூணூல் கல்யாணம், அதைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வேத ஆகம கல்லூரிகள் படிப்பு. இதற்காக பிள்ளையார்பட்டி, அல்லூர், மாயவரம், தர்மபுரம் உள்ளிட்ட 21 இடங்களில் வேத ஆகம கல்லூரிகள் இருக்கு. இப்படி வேத ஆகமங்களைக் கற்றறிந்தவர்கள்தான் அர்ச்சகர் ஆக முடியும். சாதாரணமா எல்லோரும் அர்ச்சகர் ஆக முடியாது.

இப்போது அரசு, எல்லா சாதியினரையும் அர்ச்சகரா நியமனம் செஞ்சா, எங்களுக்கு மாற்று வேலை என்ன? அ.தி.மு.க. ஆட்சியில் சாலைப் பணியாளர்களுக்கு ஏற்பட்ட கதிதானா?....

அமைச்சரவை முடிவைத் தொடர்ந்து, கடந்த 17-ம் தேதி சென்னையில் சோ தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழில் அர்ச்சனை, எல்லா சாதிக்கும் அர்ச்சகர் பதவி ஆகியவை பற்றி விரிவாய் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அமைச்சரவை முடிவை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அது சட்ட வடிவில் வந்தால் தானே கோர்ட்டுக்குப் போக முடியும். எனவே, பொறுத்திருந்து பார்ப்போம் என்று அப்போது முடிவெடுக்கப்பட்டது" என்றார் மணிபட்டர்....

எல்லா சாதியினருக்கும் அர்ச்சகர் பதவி என்று அமைச்சரவை கூடி முடிவெடுத்த மாத்திரத்திலேயே அர்ச்சகர்கள் அனைவரும் வீடுகளில் சீக்ரெட்டாய் 108 காயத்திரி ஜெபம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதிகாலையில் கணவனும், மனைவியும் இந்த ஜெபம் செய்வோம். 'ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தியைக் கொடு' என்று ஜெபம் செய்வோம். இதன் மூலம் அதர்மம் அழியும், தர்மம் வெல்லும் என்பது எங்கள் நம்பிக்கை. இதைத் தமிழ்நாடு முழுக்க உள்ள அர்ச்சகர்கள் தினமும் செய்து வருகிறார்கள். தவிர, ஜபஹோம கண்ணீர் அஞ்சலியும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதாவது, சிவபெருமானின் சன்னதியில் இந்தச் சட்டத்தினால் நமக்கு ஏற்படும் துன்பங்கள் பற்றிச் சொல்லி, கண்ணீர் விட்டு அழுவதே இந்த ஜெப ஹோம கண்ணீர் அஞ்சலி ஆகும். எங்களின் இந்தக் கண்ணீர் வீண் போகாது' என்றார்."


Related blogs:

Hinduism: its caste system & priesthood (18 June 2005)


Comments may be forwarded to: anbarul@yahoo.com